உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே.. எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனை வயப்பட்டதாகவே தோன்றுகிறது.

இறுக்கமான மனிதர்களாகவும், எந்திர கதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ணக் குவியல்களின் கலவைகளையும், சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசை எல்லாம் பார்க்க முடிகிறது.

சகமனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல் தனியொரு உலகில் சிந்தனைகளோடு பயணிக்கும் உலகமாக மாறி விட்டது.

இதற்கெல்லாம் அடிப்படை என்ன  என்று சிந்தித்தால் அவரவருக்கான தனிப்பட்ட எண்ணங்களே ஆகும்.

எண்ண ஓட்டங்கள் தவறாக இருக்கும் போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது. மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை

நமது செயல்கள் அனைத்தும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்பே ஆகும். ஒருவரின் எண்ணம் நல்லவிதமாக இருந்தால் செயலும் நல்லவிதமாக இருக்கும்.

கெடுதலான எண்ணங்கள் கெடுதலான செயல்களில் முடியும். எண்ணங்கள் செயல்களாகும்.

செயல்கள் பழக்க வழக்கங்களாகும்.பழக்க வழக்கங்களே ஒருவருடைய நடத்தையை நிர்ணயம் செய்யும்..

ஒரு தடவை ஒரு அப்பாவும் மகனும் ஒரு மலை மீது நடந்து சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது பையன் கல் தடுக்கி கீழ விழுந்து விட்டான்..

அடிபட்டதனால் அவன் ''ஆ..ஆ..ஆ..ஆ..ஆ'' ன்னு கத்தினான். தூரத்துல இதே மாதிரி இவன் கத்தின மாதிரியே '' ஆ ஆ ஆ ஆ ஆ'' சத்தம் திரும்பக் கேட்டுது..

பையன் சத்தம் வரும் திசையைப் பார்த்து,'நீ யார்'' என்று சத்தமாகக் கேட்டான். திரும்பவும் அந்தப் பக்கத்தில் இருந்து' நீ யார்''னு கேட்டுது.

பையன், '' நான் உன்னை விரும்புகிறேன்'' என்று சொன்னான். அந்தப் பக்கமும் அதே வார்த்தை திரும்ப வந்தது..

பையன் '' நீ ஒரு கோழை" என்று சொன்னான்.அதே வார்த்தை திருப்பிக் கேட்டுது.. பையனுக்கு ஒரே ஆச்சரியம். அவனின் அப்பாவிடம்  கேட்டான்...

"அது யாருப்பா அவன்.., நான் சொல்வதை எல்லாம் திரும்பச் சொல்றானே'' ன்னு கேட்டான்.

அவனின் தந்தை சொன்னார். அது யாரும் இல்லை. அது உன் பேச்சின் எதிரொலி என்று சொல்லி விட்டு இதைப் போலத்தான் நம் வாழ்க்கை என்று சொன்னார்..

அப்பா சொன்னார்,' 'நீ என்ன எல்லாம் கொடுக்கிறாயோ அதுதான் உனக்குத் திரும்பக் கிடைக்கும்.

உன் பழக்கவழக்கம் எப்படி இருக்கின்றதோ, அது மாதிரி தான்  உன்னிடத்தில் பழகுகின்றவர்களும் இருப்பார்கள்..

உன் கோழைத்தனம் திரும்பவும் கோழைத்தனமான வாழ்க்கையைத் தான் உனக்குக் கொடுக்கும்.

நீ உன்னைச் சுற்றி இருக்கிறதை ரசித்தாய் என்றால் வாழ்க்கையும் உன்னை ரொம்ப ரசிக்கும்படியாக வைத்து இருக்கும்'' னு சொன்னார்.,

ஆம்.,நண்பர்களே.,

நம் மனதில் தோன்றும் எந்த எண்ணமும் வீணாவது இல்லை என்பதை நினைவில் கொள்வோம்.

மகிழ்ச்சியான, உயர்வான வாழ்க்கைக்கு அடிப்படையான நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வோம்.

நல்லதையே நினைப்போம். நல்லதையே செய்வோம்.