இப்போதெல்லாம் சிறிய செயலுக்குக் கூட பொறுமை இல்லாமல் கொதித்துப் போகிறோம். இதனால் பகைமை வளர்ந்து விடுகிறது.

இந்த பகைமை நாளாவட்டத்தில் நம் உறவுகளையும் நட்புகளையும் இழந்து ஒன்றும் இல்லாமல் செய்து விடுகிறது.

உங்களை திட்டுபவர் அல்லது துன்புறுத்துபவர் மீது உங்கள் இதயத்தில் எந்த விதமான பகைமை உணர்ச்சியையும் கொள்ளாதீர்கள்.

வெளிப்படையாக கோபத்தை காட்டுவதை விட இது மிகவும் மோசமானது. இது மானசீகப் புற்று நோய். பகைமையை வளர்க்காதீர்கள். மறந்து விடுங்கள். மன்னியுங்கள்.

இது ஏதோ ஒரு வெறும் லட்சியவாத பழமொழி அல்ல. உங்கள் அமைதியை பாதுகாக்க ஒரே வழி இது தான்.

உள்ளே பகைமை வளர்ப்பது என்பது ஒருவனுக்கு மிகுந்த கெடுதி யைச் செய்யும். உங்களுக்கு தூக்கம் போய் விடும். உங்கள் இரத்தத்தை நீங்கள் நஞ்சு ஆக்குகின்றீர்கள். இரத்தக் கொதிப்பும், படபடப்பும் உங்களிடம் அதிகரிக்கும்

மாவீரன் அலெக்சாண்டரின் தந்தை பிலிப் சிறந்த அறிவாற்றல் மிக்கவர். பலம் பொருந்திய மன்னராக ஆட்சி செய்து வந்தார். அவரது பகுதிக்கு உட்பட்ட ஜமீன்தார் ஒருவர் மன்னரைப்பற்றி எப்போதும் குறை கூறிக் கொண்டு இருப்பார்.

இது மன்னரின் காதிற்கு எட்டியது. அந்த நாட்டு வழக்கப்படி அது தேசவிரோதம். அந்த ஜமீன்தார் ஆர்க்கீடியஸ் இருக்கும் பகுதிக்கு சென்ற மன்னர் தன் அதிகாரிகளிடம் அந்த ஆர்க்கீடியஸை அழைத்து வரும்படி கூறினார்

தன் மந்திரியிடம் ஆர்க்கீடியஸ் என்னிடம் கொண்டுள்ள பகைமைக்கு இன்று முடிவு கட்டுகின்றேன் என்றார்.

விபரம் அறிந்த ஆர்க்கீடியஸ் மிகவும் பதற்றம் அடைந்தார். தன் ராஜதுரோகச் செயலுக்கு மரணதண்டனைதான் கிடைக்கும் என்ற கலவரத்தில் புறப்பட்டுச் சென்றார்.

அவர் வந்ததும் மன்னர், எல்லா அதிகாரிகளையும் வெளியில் அனுப்பி விட்டு தனிமையில் சந்தித்தார். மன்னரின் தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் வெளியில் தயாராக காத்து இருந்தனர்.

சிறுது நேரம் கழித்ததும் மன்னரும் ஆர்க்கீடியஸும் கைக்கோர்த்துக் கொண்டு புன்முறுவலுடன் வெளியில் வந்தனர். எல்லோருக்கும் அதிர்ச்சி.

மந்திரி, ‘மன்னா பகைவனை ஒழித்துக் கட்டுவேன் என்றீர்கள்’ என ஆச்சரியத்தின் விழிம்பில் கேட்டார். அதற்கு மன்னர், ‘ஆம், பகைவனை ஒழித்து கட்டிவிட்டு அவனிடத்தில் ஒரு புதிய நண்பனை உருவாக்கி விட்டேன்.

ஆர்க்கீடியஸ் நல்ல மனிதர், என்னைப் பற்றி தவறாக புரிந்து கொண்டு இருந்துள்ளார். நேரில் பேசியதில் அது புரிந்து எங்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கியது. என்னைச் சரியாக புரிந்து கொண்டதால் அவர் என்மீது கொண்டிருந்த பகை உணர்வுகள் நீங்கி நட்பு மலர்ந்து உள்ளது’ என்றார்..

பகைவனை அழிப்பது என்றால் பகைமையை அழிப்பது என்று தான் அர்த்தம், பகைவனைக் கொல்வதல்ல! அப்படிசெய்தால் பகைமை அழியாது. வம்ச வம்சமாகத் தொடரும் என்றார்...
.
ஆம்.,நண்பர்களே..

“நம்மை வெறுப்பவர்கள் நமக்கு பகைவர்கள் இல்லை, நம்மால் வெறுக்கப்படுபவர்களே நம் பகைவர்கள் பகைமை மறப்போம் . அன்பை செலுத்துவோம்..