"உங்களுக்கு வயதாகி விட்டது, பழைய மாதிரி ஓட, பளு தூக்க வேண்டாம்" என நண்பர்களோ, மற்றவர்களோ சொல்லி அதை நாம் கேட்டால், அது நமக்கு நாமே விதித்துக் கொள்ளும் மரண தண்டனைக்குச் சமம்.
வயதாவது என்பதன் விரிவுரை என்பது "ஒரு குறிப்பிட்ட வயதைத் தொட்ட பின் நாம் முதியவர்கள், அந்த வயதைத் தொடாதவரை இளையவர்கள்" என்பது அல்ல.
"இளமையில் வறுமை" மிகக் கொடியது என்பார் அவ்வை. ஆனால் அதைவிடக் கொடியது, "இளமையில் வரும் முதுமை"
நேற்றைய நிலை 70, 80 களில் வரும் வியாதிகள் 50,60 வயதினர்க்கு வருவதைக் கண்டது..
இன்றைய நிலை என்பது 20, 25 வயதில் மாரடைப்பு ஐந்து வருட குழந்தைக்கு சர்க்கரை வியாதி, 30 வயதில் புற்றுநோய் என்பது.
ஆக 70, 80களில் வந்த முதுமை இப்போது 10 வயதிலேயே உடல் பருமனில் துவங்கி விடுகிறது.
பெண்கள் ஏழெட்டு வயதில் பூப்பு அடைகிறார்கள். இதை "இளமையில் முதுமை" எனச் சொல்லாமல் எப்படி சொல்ல முடியும்?
அதே சமயம் 90, 100 வயதில் உடல் உறுதியுடன் மாரத்தான் ஓடி சாதனை புரிந்தவர்களைப் பார்க்கின்றோம்.
79 வயதில் ஒருவர் 200 கிலோ எடையைத் தூக்கி சாதனை செய்கிறார். 79 வயதில் 200 கிலோ தூக்கும் ஒருவர் முதியவரா? இளைஞரா?
ஆக வயதாவது என்பது ஒரு குறிப்பிட்ட வயதைத் தொடுவதோ, பேரனோ, பேத்தியோ வருவது, ஓய்வு பெறுவது, நரை,திரை, வழுக்கை இவை எல்லாம் அல்ல.
இவை எல்லாம் வாழ்க்கையில் நடக்கும் இயல்பான மாற்றங்கள். வயதாவதன் அறிகுறி அல்ல.
10 வயதில் முதுமையும் அடையலாம். 80 வயதில் 20 வயதினரை விட இளமையுடனும் இருக்கலாம்.
நமக்கு உண்மையில் எப்போது வயது ஆகிறது?
வளர்ச்சி இருக்கும் வரை நாம் இளைஞர்கள் தான் வளர்ச்சி நின்றால் முதியவர்கள்.
தினமும் புதியதாகக் கற்றுக் கொள்ளும் வரை வளர்ந்து கொண்டே இருக்கிறோம் என்றே பொருள்.
நம் மூளை செல்கள் வளர்கின்றன. உடற்பயிற்சி செய்வதால் நம் தசைகள் வளர்கின்றன. உடல் வலு அடைகிறது..
ஆக மூளையும், உடலும் வளரும் 75 வயது பெரியவரை நாம் இளைஞர் என்று தான் அழைக்க முடியும்.
உடற்பயிற்சி செய்யாத 31 வயது இளைஞரின் உடலும், மூளையும் வளர்ச்சி அடைவதை நிறுத்தி விடுவதால் அவரை முதியவர் என அழைப்பது பொருத்தமாக இருக்கும்.
ஆக இளமையும் முதுமையும் அவரவர் உடல் மற்றும் மன வலுவால் தீர்மானம் ஆகிறதேயொழிய ஆண்டுகளால் தீர்மானம் ஆவது இல்லை.
அதனால் உங்கள் வயது எதுவாக இருப்பினும் நீங்கள் செய்ய முடியாத செயல்கள், எட்ட முடியாத உயரம் என எதுவுமில்லை.
அந்த நம்பிக்கை இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் இளைஞர் தான்.
அந்த நம்பிக்கை அற்றுப் போய் குப்பை உணவுகள் மற்றும் குப்பை வாழ்க்கை முறையில் வீழ்ந்தால் 10 வயதிலும் நீங்கள் முதியவர் தான்.
உங்கள் வயது என்ன என்பது உங்கள் கையில் இல்லை..ஆனால் நீங்கள் இளைஞரா?, முதியவரா? என்பது உங்கள் கைகளில் தான் உள்ளது..
ஆம்.,அன்பு நண்பர்களே..,
ஆரோக்கியமாக வாழ்ந்து, முதுமையை முடிந்தளவிற்கு தள்ளிப் போட நாம் நம்மை முதலில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதை செய்து முடிக்க அல்லது சாதித்துக் காட்ட முதலில் மனதில் அதிக உறுதி வேண்டும்.
நம் முயற்சியில் நாம் கண்டிப்பாக வெற்றி அடைவோம் என்ற எண்ணத்தை ஆழ்மனதில் விதைக்க வேண்டும்.
பின்பு அதே உறுதியில், நாம் நினைத்ததை செயல்படுத்த வேண்டும்.
இதைத் தவறாமல் வாழ்க்கையில் கடைப்பிடித்தால், முதுமையையும் வெல்ல முடியும்.
ஒன்று மட்டும் உண்மை. அதீத மனோபலம் இருந்தால் முதுமையை வெல்லலாம்..