செருக்கு என்பது ஓர் தீயகுணம், அதுவே பல தீய விளைவுகளுக்கு காரணமும் கூட. செருக்கில் விழுந்தவர்கள் என்றுமே உயர்ந்த நிலையை அடைய முடியாது...

செருக்கு யாரிடம் இருக்கிறதோ!, அவர்கள் மற்றவர்களிடமிருந்து அன்பு, நட்பு, பாசம் போன்றவற்றைப் பெற இயலாது, அவர்களுக்கு நல்லவற்றை சொன்னாலும் கேட்க மாட்டார்கள். நல்லது சொன்னவர்களை அற்பமானவர்களாகக் கருதுவார்கள்...

செருக்கினை அழித்து, மற்றவர்களையும் மதித்து, அவர்களையும் அரவணைத்து, தன் வாழ்க்கைப் பாதையை சீராகக் கொண்டு சென்றால்  அவர்களுக்கு வாழ்க்கையில் எத்தனையோ வெற்றிகள் கிடைக்கும். செருக்கின்மையே வாழ்க்கையின் வெற்றி. அந்த வெற்றியின் மறைபொருள்...

ஒரு அரசர், ‘யான் எனல்’ என்ற செருக்கு நிரம்பியவர். வேட்டைக்குச் சென்ற போது ஒரு துறவியை சந்திக்க நேரிட்டது. அவர் கண்களை மூடித் தியானம் செய்து கொண்டிருந்தார்...

அந்தத் துறவியைப் பார்த்து அரசன்..,

”நான் பல நாடுகளை வென்றவன், அது இது என்றெல்லாம் தன்னைப் பற்றிக் கூறிய அரசன், எல்லாம் தனக்கு இருந்தும் தான் ''நிம்மதி இல்லாமல்'' இருப்பதாகக் கூறி,  தனக்கு எப்போது மகிழ்ச்சி கிடைக்கும் எனக் கேட்டான்...

தியானம் கலைந்ததால் கண்விழித்த துறவி சற்றே சினமுற்று,

”நான் மரணித்தால் தான் உமக்கு மகிழ்ச்சி கிடைக்கும்". என்று கூறி விட்டு மீண்டும் கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்தார்...

நான் எத்தனைப் பெரிய அரசன் என்னையே அவமானப்படுத்துகிறீர்களா...?” என்றபடி சற்றும் சிந்திக்காமல் துறவியை கொல்வதற்காக கத்தியை உருவினார் அரசர்...

''மூடியே!, நான் என்றால், என்னைச் சொல்லவில்லை,  ‘நான்’ என்ற இறுமாப்பு மரணித்தால் தான் உமக்கு மகிழ்ச்சி கிடைக்கும் ...

"யான் எனும் செருக்கு" என்பது, உன் கண்ணில் விழுந்த தூசு போன்றது. அந்த தூசியை சுத்தம் செய்யாமல் உன்னால் எதையும் காண இயலாது...

எனவே!,  நான் என்னும் செருக்கு என்கிற தூசியை சுத்தம் செய்து விட்டு உலகத்தைப் பாருங்கள்''” என்று விளக்கினார் துறவி...

ஆம் நண்பர்களே...!

தேனில் மூழ்கி இறக்கும் சிறுவண்டு போல், ஆணவம் கொண்ட மனம், 'யான்' என்கிற செருக்கின் மாயைக்குள் அகப்பட்டு, தன்னுடைய அழிவைத் தேடிக் கொள்கிறது. இந்தத் தலைகனம் நம்மை அழிப்பது மட்டுமின்றி, நமது சுற்றத்தாரையும் அழித்து விடும்...!

தோழர்கள், பிரியமானவர்கள், பாசமானவர்கள், இப்படி நம் மேல் அக்கறை கொண்டுள்ள பலரிடம் இருந்து நம்மைப் பிரித்து தனித் தீவாக்கி முழுஅழிப்பு (நிர்மூலம்) செய்து விடும்...!!

இந்தத் தலைக்கனம் என்னும் செருக்கு நமக்குத் தேவை தானா...?

மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டியது, மனிதன் எந்த அளவு உயர்வு கொள்கிறானோ!, அந்த அளவு அவனுக்குப் பணிவு வர வேண்டும். அது அவனை மேலும் மேலும் உயர்த்தும் என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்...!!!

வாழ்க்கையில் வெற்றி பெற்று மேன்மையான நிலையை அடைய விரும்புகின்றவர்கள் தலைக்கனம் அற்றவர்களாக இருக்க வேண்டும்...!

சற்றே சிந்தியுங்கள்...