இன்றைக்கு நீங்கள் இந்த நிலைமைக்கு வந்ததற்கு நம் பெற்றோர்கள் நம்மை நன்கு பராமரித்துத் தந்ததால் தானே..?
நாம் இந்த பூமியில் வந்த நாளில் இருந்து நமக்காக உணவை தேடிக் கொள்ளக் கூட நம்மிடம் எந்தத் திறனும் இல்லை.
முற்றிலும் கையாலாகாமல் கிடந்த நம்மை நம் அம்மா எடுத்து மார்போடு அணைத்துப் பாலூட்டவில்லை என்றால்,நாம் இந்நேரம் என்னவாகி இருப்போம்..?
உணவு மட்டும் அல்ல. மொத்த உலகமே நமக்கு அவள் தானே..
உலகம் தோன்றிய நாளில் இருந்து இதுநாள் வரை யாரவது கடவுளைப் பார்த்தது உண்டா.?
ஆனால் நமது கற்பனையில் எண்ணும் அந்தக் கடவுள் தன்மைக்கு நெருக்கமாக நாம் அனைவரும் உணர்ந்த உலகில் ஒரே ஒருவர் நம் தாய் தானே..
அவர்களால் தான் நாம் என்ற எண்ணம் நம் மனதில் என்றும் நிலைத்து இருக்க வேண்டும்..
தாயும், தந்தையும் தான் நம்மை இத்தரணியைக் காணச் செய்தவர்கள். அவர்களே நம் முதல் ஆசான்.
பெற்றோர் தம் குழந்தைகளை சிறுவயது முதல் பெரியவனாகும் வரை தங்களின் அரவணைப்பில் வளர்த்து ஆளாக்குகின்றனர்.
பேச கற்றுத் தருகின்றனர். நடக்கக் கற்று தருகின்றனர். அனைத்துக்கும் மேலான கேடில் விழுச்செல்வமான கல்வியைக் கற்பதற்கு வழிவகை செய்கின்றனர்.
"அறிவே ஆற்றல்" என்பதை உணர்த்துகின்றனர். பள்ளிப்படிப்போடு நிறுத்தி விடாமல் மேற்படிப்பையும் தருகின்றனர்.
ஒழுக்கம் விழுப்பம் தரும். ஆம், பெற்றோர்கள் உயிரினும் மேலான ஒழுக்கத்தை நமக்கு போதிக்கின்றனர்.
பின்னர் வேலை வாய்ப்பு, நல்ல வாழ்க்கைத் துணை ஆகியவற்றை அமைத்து நம்மை நிம்மதியாகயும், மகிழ்வுடன் வாழ வைத்து நம் வாழ்வில் ஓடமாய் இருக்கின்றனர்.
மொத்தத்தில் நமக்கு முதல் ஆசான் அன்னை, தந்தையே என்பதில் ஐயம் இல்லை.
இதற்கான நன்றிக் கடனை பெற்றோருக்கு செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவர் கடமை.
ஆனால் இன்றைய இளைஞர்களோ வாழ்வில் நல்ல நிலையை எய்தியவுடன் ஏற்றி விட்ட ஏணியை எட்டித் தட்டி விடுகின்றனர்.
அது மட்டுமின்றி பெற்றோர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாத பிள்ளைகளாக வாழ்ந்து வருபவர்களும் உண்டு.
நாகரீகம் எனும் பெயரில் பெற்றோரை உதாசீனப் படுத்துகின்றனர். நாளை தன் குழந்தைகளால் தனக்கும் இந்நிலை தான் என்பதை உணராமல் இருக்கிறார்கள்.
ஆனால் குழந்தைகள் செய்யும் எந்தத் தவறையும் பெற்றோர் மன்னித்து மறந்து விடுகின்றனர்.
ஆம், நண்பர்களே.,
நமக்கு நடக்கக் கற்றுக் கொடுத்த பெற்றோர்கள், அவர்கள் வயதான காலத்தில்,ஒரு கௌரவமான வாழ்க்கை வாழ எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டியது நமது பொறுப்பும், கடமையுமாகும்..
இதை மறந்த எந்த மனிதரும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை..
பெற்றோர் நம் வாழ்வின் மாபெரும் கொடை. அவர்கள் இல்லை எனில் இம்மண்ணிலே நாம் ஒரு மனிதன் இல்லை என அறிவோம்..
வெயிலை எண்ணிப் பாருங்கள்.. மரத்தின் அருமை தெரியும்.
அனாதைகளை எண்ணிப் பாருங்கள் பெற்றோரின் அருமை தெரியும்.
பெற்றோரை பேணுவோம். பேறுகள் பல பெறுவோம்.
நம் பெற்றோர்களை நம் கண் இமை போல் காப்போம்......