மற்றவர்களிடம் குறை காண்பது மிக எளிது, ஆனால்!, அக்குறையே நம்மிடம் இல்லாமல் நடப்பது கடினமானதாகும்...
பிறருடைய குற்றங்களை அதிகமாகச் சிந்திப்பதை விட தங்களின் குற்றங்களை அதிகமாகச் சிந்தியுங்கள் என்பது முதுமொழி...
நிறை கண்டால் போற்றுங்கள். குறை கண்டால் ஒன்றும் கூறாதீர்கள் என்பது பெரியவர் கூற்று...
ஒரு பெரியவர் கையில் கண்ணாடி வைத்து அடிக்கடி அதைப் பார்ப்பார். பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கி விடுவார்...
இதை வெகுநாட்களாக அருகில் வசித்து வந்த ஒரு இளைஞர் கவனித்துக் கொண்டு வந்தார்..
ஒரு நாள்!, அந்தப் பெரியவரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்...
பின்பு அவரிடம் அய்யா!, நீங்கள் அடிக்கடி அந்தக் கண்ணாடியை பார்த்துக் கொண்டே இருக்கறீர்களே!, அது ஏதாவது விந்தையான கண்ணாடியா...? என்று வினவினான்...
அதற்கு அந்தப் பெரியவர், சாதாரணக் கண்ணாடி தான், ஆனால்!, அது தரும் பாடங்கள் நிறைய..! என்றார்
பாடமா?!. "கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்...?”
"ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக் காட்ட வேண்டும். எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதை இந்தக் கண்ணாடியிடம் கற்க வேண்டும்...!”
“எப்படி...?”என்றார்.
நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளதை உள்ளபடி காட்டுகிறது...
அதே போல் உன் சகோதரரிடம் , நண்பரிடம் எந்த அளவிற்குக் குறை இருக்கிறதோ!, அந்த அளவிற்குத் தான் அதனைச் சுட்டிக் காட்ட வேண்டும்...
எதையும் மிகையாகவோ, புனைவுகளைக் கூட்டியோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ!, கடுகை மலையாக்கவோ கூடாது...
கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போது தான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடும்...
அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக் காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக் கூடாது...
ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுவது இல்லை...!
இது கண்ணாடி தரும் பாடம்!என்றார்...
ஆம் நண்பர்களே...!
இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் உங்கள் மனதை அலங்கரிக்கட்டும்...!
🔴 நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ!, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும்...!!
⚫அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக் கொள்ள வேண்டும்...!