1. துறவி கேட்ட கேள்வி ?

அது ஒரு அழகிய ஊர். அங்கு வயது முதிர்ந்த துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் அறிவுக்கும் ஞானத்திற்கும் ஈடு அவர் மட்டுமே. ஊரில் வரும் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் கைத்தேர்ந்தவர்.

அவரின் அறிவார்ந்த கருத்துக்களை கேட்கக் கூட்டம் எப்பொழுதும் கூடிகொண்டே இருக்கும். அவரின் ஆலோசனை தெளிவாகவும் ஆழமாகவும் இருப்பதால், கல்வி கற்காத பாமரனும் செல்வந்தர்களும் அவரைக் காண வந்த வண்ணமே இருந்தனர்.

அவர் அந்த ஊருக்கு வந்து 1௦ வருடங்கள் நிறைவுற்றது. அந்த ஊரின் மக்கள் அவருக்கு எந்த ஒரு குறையும் வைத்ததில்லை. துறவிக்கு மனதில் ஒரு வருத்தம் வளர்ந்து கொண்டிருந்தது.

ஊர் மக்கள் தன்னை வந்து சந்திப்பதையும் கருத்துகளைக் கேட்பதையும் அவர் விரும்பினாலும், தங்கள் வாழ்வின் பிரச்சனைகளைக் கூறி அடிக்கடி அவரிடம் புலம்புவது சற்று வேதனை அளித்தது.

துறவி அவரது வயதுக்கு ஏற்றச் சாமர்த்தியம் கொண்டவர். மக்கள் தாங்கள் செய்யும் தவறை உணர்த்த விரும்பிய அவர், அனைத்து ஊர் மக்களையும் அடுத்த நாள் காலைத் தன்னை வந்து சந்திக்கும்படி செய்தி அனுப்பினார்.

அடுத்த நாள் விடிந்தது அவரின் வார்த்தைக்கு இணங்க அனைத்து மக்கள் கூட்டமும் அவரின் ஆசிரமத்தின் வாசலில் கூடி நின்றனர். வெளிய வந்த அந்தத் துறவி மக்கள் அனைவரையும் கண்டு புன்னகைத்து ஒரு ஜோக் கூற தொடங்கினார். அவரின் நகைச்சுவை சிறப்பாக இருக்க மொத்த கூட்டமும் சிரித்து ரசிக்கத் தொடங்கியது.

அதைக் கண்டு புன்னகைத்த துறவி மீண்டும் 'அதே ஜோக்-கை' கூறினார். கூட்டத்தின் சிரிப்பு பாதியாகக் குறைந்தது. அதோடு நிற்கவில்லை அவர். மீண்டும் அதையே அவர் கூற, மக்கள் முகம் சுளிக்க தொடங்கினர். வயது மூப்பின் காரணமாக ஏதோ அவருக்கு நேர்ந்து விட்டது என்றே எண்ண தொடங்கி விட்டனர்.

சட்டென்று பேசத் தொடங்கிய அவர், "மக்களே! ரசிக்கும் நகைச்சுவையை மீண்டும் மீண்டும் கூற முகம் சுளிக்கும் நாம் பிரச்சனைகளை மீண்டும் மீண்டும் எண்ணி வருந்துவது சரியா?" எனக் கூறி விட்டு உள்ளே அமைதியாகச் சென்றுவிட்டார்.

மக்கள் தாம் செய்துக் கொண்டிருக்கும் தவறை உணர்ந்தவர்களாய் தங்கள் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினர்.

நீதி:
வருந்திக் கொண்டிருப்பது மட்டுமே பிரச்சனைக்குத் தீர்வைத் தராது.

2. என்ன வேண்டும் என்னிடம் கேளுங்கள் !

ராஜா ஒருவர் தன் நாட்டைச் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். அவரிடமில்லாத செல்வமோ அறிவோ எதுவுமில்லை. தன் ஞானத்தில் எந்த ஒரு குறையுமில்லை என்று தன் மீது மிகுந்த கர்வம் கொண்டிருந்தார். அந்த ஊரில் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரின் பெருமைகளையும் ஞானத்தையும் புகழாதோர் அந்த ஊரில் யாருமில்லை. அவரின் பெருமை ராஜாவையும் சென்று அடைந்தது. உண்மையில் அவர் ஆசையற்ற முற்றும்அறிந்து துறந்த ஞானி தானா என அவரைச் சொதிக்க விரும்பினார்.

தான் அழைத்ததாகக் கூறி அவரை அழைத்து வருமாறு காவலாளிகளை அனுப்பினார். அவர்கள் துறவியின் வசிப்பிடம் வந்தனர். துறவியோ முற்றும் உணர்ந்த ஞானி, அவர்கள் வந்தவுடனே அனைத்தையும் புரிந்துக்கொண்டார். தன்னை சொத்திக்க விரும்பும் ராஜாவிற்கு சில உண்மைகளைப் புரிய வைக்க எண்ணினார். அரண்மனையை அடைந்ததும், ராஜா அவரைச் சிறப்பாக வரவேற்றார்.

"துறவியே உங்களுக்கு என்ன வேண்டும் என்னிடம் கேளுங்கள்!" என்றார் ராஜா. துறவி மனதினுள்ளே புன்னகைத்தார். ராஜா துறவி எதுவும் கேட்கமாட்டார் அவரின் ஆசையை மேலும்தூண்டி பார்போம் என்று திட்டம் தீட்டினார்.

சற்றும் எதிர் பார்க்காத விதமாக, " எனக்கு 1௦௦ பொற்காசுகள் வேண்டும்" என்று கேட்டார் துறவி. அதிர்ந்து போனார் ராஜா. 'பற்று இல்லாமல் இருக்க வேண்டிய துறவி செல்வத்தைத் தேடுவதா?' என மனதிற்குள் எண்ணிக் கொண்டார்.

எதுவும் பேசாமல் பொற்காசுகளை கொடுத்து வழி அனுப்பினார். ராஜாவிற்கு ஒரு ஆர்வம் அந்தப் பொற்காசுகளை வைத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்று அவரைப் பின் தொடர்ந்து சென்று பார்க்கத் தொடங்கினார்.

துறவியோ நேராக ஒரு ஆற்றுக்குச் சென்று அதனுள் பொற்காசுகளை ஒன்று ஒன்றாகப் போட்டார். ராஜாவிற்கு மனது போறுக்கவில்லை. "நில்லுங்கள்! என்ன செய்கிறீர்கள்? உங்களுக்குப் பொற்காசு வேண்டாமெனில் வேண்டியவருக்குத் தரலாமே, ஏன் அற்றில் போடுகிறீர்கள்?" என்று பதைபதைத்தார்.

துறவி புன்னகையோடு, "எப்பொழுது இந்தப் பொற்காசை என்னிடம் கொடுத்தாயோ, அப்போதே இது என்னுடையது. இதை என்ன செய்ய வேண்டும் வேண்டாம் என்று நானே முடிவு செய்வேன்." எனக் கூறினார்.

பொற்காசை ஒரு பொருளாக மதிக்காமல் நீரிலே போட்டு, அவரது பற்று அற்ற தன்மையையும் அறிவாளியாக நினைத்து ஆணவம் கொண்ட தனது அறிவின்மையையும் ஒரு செயலில் உணர்த்திய துறவியை வணங்கினார் ராஜா.

நீதி:
மற்றவரிடம் குறை தேடும் முன் நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.