மிகவும் ஆழமான கிணறு ஒன்றில் இரண்டு தவளைகள் விழுந்து விட்டன. இரண்டும் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தவித்தன. கிணற்றின் ஓரம் ஏறி மேலே வருவதற்கு முயற்சி செய்துக் கொண்டிருந்தன. ஆனால் அங்கு இருந்த ஈர பததித்தின் காரணமாக இரண்டு தவளைகளும் வழுக்கி வழுக்கி உள்ளே விழுந்துக் கொண்டிருந்தன.
இரண்டு தவளைகளும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த தகவல் அங்கிருந்த அனைத்து தவளைகளுக்கும் தெரிய வந்தது. அனைத்து தவளைகளும் ஒன்றுக் கூடி கிணற்றின் அருகே வந்தது.
ஆனால் அந்தத் தவளை கூட்டம், அந்த இரு தவளைகளுக்கு உதவி செய்யவில்லை. அதற்கு மாறாக இரு தவளைகளிடமும், ’ஏன் வீணாக முயற்சி செய்துக் கொண்டிருகிறீர்கள்? உங்களால் இது முடியாது. உங்கள் முயற்சியைக் கைவிட்டு விடுங்கள். மரணம் தான் உங்கள் முடிவு’ என்று கூச்சலிட்டது.
இரு தவளைகளும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மீண்டும் முயற்சி செய்துக் கொண்டே இருந்தன. தவளை கூட்டம் விடுவதாக இல்லை, ‘இந்தக் கிணறு மிகவும் ஆழமானது. இதன் சுவறுகளின் ஈரப்பதத்தை எந்தத் தவளைகளாலும் வெல்ல முடியாது. வீண் முயற்சியை விட்டுவிட்டு மரணத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கத்தியது.
இரு தவளைகளில் ஒரு தவளை சற்று தடுமாறியது. மீண்டும் கத்தியது அந்தக் கூட்டம், ’மேலே நீங்கள் ஏறி வர வேண்டிய தூரத்தைக் கண்டீர்களா? இவ்வளவு தூரம் ஏறி வருவது சாத்தியம் அற்றது. இதுவரை இந்தக் கிணற்றில் விழுந்த 98 தவளைகளும் இறந்துவிட்டன. உங்களுடன் சேர்த்து அந்த எண்ணிக்கை இன்று 100 ஆக உயர போகிறது. முயற்சியைக் கைவிட்டுவிடுங்கள் உங்கள் விதி மரணம் தான் என்பதை ஏற்று, கிணற்றின் உள்ளே விழுந்து விடுங்கள்’ என்று ஆரவாரம் செய்தது.
இரு தவளைகளில் ஒரு தவளையின் மனம் மாறியது. மேலே இருக்கும் தவளைகள் கூறுவது சரி தான் என்று ஏற்றுக் கொண்டது. அதன் முயற்சியைக் கை விட்டு, கிணற்றின் நீரினுள் விழுந்து இறந்து விட்டது.
முயற்சி செய்துக் கொண்டிருந்த அந்த ஒரு தவளையைப் பார்த்து, ‘அதோ பார். உன்னோடு ஏறிக் கொண்டிருந்த தவளை உண்மையை உணர்ந்து உள்ளே விழுந்து விட்டது. நீயும் உன் முடிவை ஏற்றுக் கொள். அது தான் உனக்கு இருக்கும் ஒரே வழி’ என்று சத்தம் போட்டது.
உயிர் தப்பிய தவளை
ஆனால் அந்த ஒரு தவளை அவை கூறும் எதையும் கண்டுக் கொள்ளவில்லை. மேலே ஏற முயற்சி செய்துக் கொண்டே இருந்தது. பல மணி நேர முயற்சிக்குப் பின் மேலே ஏறி வந்து விட்டது. சுற்றி இருந்த தவளைகளுக்கு ஒரே ஆச்சிரியம். அந்தத் தவளையைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடின.
அதற்குப் பின் மேலே வந்த தவளை அந்தத் தவளை கூட்டத்திடம், ’தவளை நண்பர்களே! உங்களால் தான் என்னால் இதைச் செய்ய முடிந்தது மிகவும் நன்றி’ என்று உரைத்தது. தவளை கூட்டம் குழப்பமாக நின்றது.
அந்தத் தவளை மேலும் தொடர்ந்தது, ‘எனக்குச் சிறு வயது முதலே காதுக் கேட்காது. செவித்திறன் குறைபாடுள்ள நான் தெரியாமல் கிணற்றின் உள்ளே விழுந்து விட்டேன். ஆனால் நீங்கள் அனைவரும் ஒன்றுக் கூடி வாயை அசைத்துக் கொண்டே இருப்பதை கவனித்துக் கொண்டே இருந்தேன்.
நான் மேலே ஏறி வர நீங்கள் அனைவரும் இடைவிடாமல் வாயை அசைத்து ஊக்கம் அளித்ததை கவனித்தேன். அது தான் நான் மேலே ஏறி வர உறுதுணையாக இருந்தது’ என்று அப்பாவியாகப் பதில் அளித்தது.
நம் வாழ்க்கையிலும் புதிதாக ஏதேனும் முயற்சி செய்யும்பொழுது, பலர் நம்மை விமர்சனம் செய்துக் கொண்டே இருப்பர். முதல் தவளையைப் போல அவற்றைக் காதில் வாங்கிக் கொண்டிருந்தால் நாம் நினைத்த இலக்கை அடைய முடியாது. இரண்டாம் தவளையைப் போல அவற்றுக்குச் செவி சாய்க்காமல் செய்ய நினைப்பதை செய்துக் கொண்டே செல்ல வேண்டும்.
ஒரு நாள் நினைத்த இலக்கை அடைந்த பின் விமர்சித்த வாய் அனைத்தும் வியந்து நம்மை வாழ்த்தும்.
ஐன்ஸ்டீனின் வாழ்க்கை
உலகம் வியக்கும் பல கண்டுபிடிப்புகளைச் சாத்தியமாக்கி காட்டிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தனது நான்கு வயது வரை பேசவில்லை, ஆட்டிசம் குறைபாடு கொண்டிருந்தார். கல்லூரி சேர நடைபெற்ற நுழைவு தேர்வில் தோல்வி அடைந்தார். இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக வேலை பார்த்துப் பின் அதையும் சரியாகச் செய்யத் தெரியாமல் கைவிட்டார்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் தந்தை சாகும் வரை ஐன்ஸ்டீனை ஒரு தோல்வியாகவே பார்த்தார். இதற்காக மனம் தளர்ந்து விடவில்லை, இதை எதையும் பொருட்படுத்தாமல் ஐன்ஸ்டீன் தன்னை நம்பினார்.
அவர் மனதிற்கு தோன்றியவற்றை தயக்கமின்றி செய்தார். இன்று அறிவியலுக்கு அடி தளமாக விளங்கும் பல முக்கியமான கண்டுபிடிப்புகள் அவர் அறிவிலிருந்து தோன்றியவைத் தான். இதுபோல வரலாற்றில் நின்ற பலரும் தன்னம்பிக்கையோடு செயல் பட்டவர்கள் தான்.
காய்ந்து நிற்கும் மரங்களை யாரும் சீண்டுவதில்லை. பழங்கள் நிறைந்த மரங்களை நோக்கியே கற்கள் எரியப் படுகிறது. அடைய நினைக்கும் இலக்கைத் தயக்கமின்றி நம்பிக்கையோடு சாதித்துக் காட்டுவோம்!