முதல் தரம் என்பது தேவை கிடையாது. ஏதோ ஒன்றை செய்தோமா, வாழ்க்கை வண்டியை ஓட்டினோமா என்று இருந்தாலே போதும். முதலாவது இடத்தைப் பெற்று விட்டால் மட்டும் நமக்கு அள்ளியா கொடுத்து விடப்போகிறார்கள்?' என்று நினைப்பவர்கள்தான் அதிகம் பேர் உள்ளனர்.
இவர்கள் இரண்டாவது அல்லது அதற்கும் கீழான இடத்தைப் பெற்றால் கூட அதற்காக வருத்தப்படப் போவதில்லை. இவர்கள் எப்போது தங்கள் வேலை முடிவடையும் என்பதிலேயே குறியாக இருப்பார்கள். பணி நேரம் முடிவடைந்ததும் எங்காவது சினிமா, பார்க், பீச், என்று பொழுதை உல்லாசமாகக் கழிப்பதில் மட்டுமே ஆர்வமாக இருப்பார்கள்.
உல்லாசமும் உற்சாகமும் தேவைதான். எப்போதும், எந்த நொடிப்பொழுதும் 'வேலை... வேலை...' என்றே இருக்கக் கூடாது. ஆனாலும் வேலையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, உல்லாச கேளிக்கைகளை மட்டுமே முன்னிறுத்திக் கொள்வது, உங்களுக்கு நல்ல பலனைத்தராது முதல் தரமானவர்களுக்கும், இரண்டாம் தரமானவர்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உண்டு. அதனைப் புரிந்துகொள்ளுதல் நல்லது.
பொது இடங்களில் பங்கேற்கும்போது முதல் தரமானவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையில் பத்தில் ஒரு பங்கு கூட இரண்டாம் தரமானவர்களுக்குக் கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட தருணங்கள் இரண்டாம் தரமானவர்களுக்கு பெரும் சோக அடியாக அமையும்.
முதல் தரத்தை அடைய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும்போது, தவறான பழக்கங்களைக் காதலித்துக்கொண்டு, அதனுடன் கைகோர்த்துக் கொண்டு சுற்றித் திரிவதனால், வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது.
வாய்ப்புகள், ஒவ்வொரு மனிதனின் வீட்டுக் கதவையும் ஒருமுறை மட்டுமே தட்டும். அப்போது கதவைத் திறக்காமல் இருந்தால், அதன்பின்னர் எப்போதுமே உங்களால் அதனை அடையவே முடியாது.
துணிமணிகள் எடுக்கச் சென்றால் கூட சில குறிப்பிட்ட பிராண்ட்தான் வேண்டும் என்று நீங்கள் அடம் பிடிக்கிறீர்கள்.
மைசூர்பாகு வாங்க வேண்டும் என்றால் எத்தனை தூரத்தில் இருந்தாலும், குறிப்பிட்ட கடையில்தான் வாங்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
ஏன். பேனா வேண்டுமென்றால் கூட ஒரு குறிப்பிட்ட நிறுவனத் தயாரிப்பைத்தான் வாங்குகிறீர்கள்.
இப்படி எதிலுமே உங்களுக்கு முதல்தரமாகத் தோன்றுகிற பொருட்களையே வாங்க நினைக்கும்போது, உங்கள் வாழ்க்கையில், நீங்கள் பணிசெய்யும் நிறுவனத்தில், இந்தப் பரந்து விரிந்த சமூகத்தில் நீங்களும் முதல்தரமாகவே இருக்க வேண்டும் என நினைக்க வேண்டும்.
ஆக முதல் தரம் என்பது நிறம், சாதி, மதம் போன்ற எதனையும் அடிப்படையாகக் கொண்டு அமைவதில்லை. அவரவரது தொழிலில், அது மருத்துவராக இருக்கலாம், இஞ்சினியராக இருக்கலாம், வியாபாரியாக இருக்கலாம், இப்படி எதுவாக இருந்தாலும், அத்தொழிலில் முனைப்போடும். திறமையோடும், புத்திசாலித்தனத் தோடும் ஈடுபட்டால் முதல் தரம் என்பது உங்களை இருகரம் கூப்பி வரவேற்கும்.